"இந்த வருடத்தின் சிறந்த படம்!" – விஜய் ஆண்டனியின் 'நூறு சாமி' படத்தை பார்த்து வியந்த இயக்குனர் எச்.வினோத்!
பிச்சைக்காரன் படத்திற்கு பிறகு சசி - விஜய் ஆண்டனி கூட்டணியில் உருவாகியுள்ள 'நூறு சாமி' திரைப்படத்தைப் பார்த்த இயக்குனர் எச்.வினோத், படம் குறித்த தனது முதல் விமர்சனத்தைப் பகிர்ந்துள்ளார்.
'பிச்சைக்காரன்' படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, இயக்குனர் சசி மற்றும் இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் 'நூறு சாமி'. கிராமத்துக் பின்னணியில் தாய் பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் மே 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், படத்தின் முதல் விமர்சனம் தற்போது வெளியாகியுள்ளது.
விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பொரேஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில், விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக சுவாசிகா நடித்துள்ளார். மேலும் கருணாஸ், லிஜோ மோல், முன்னணி இயக்குனர் பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு பாலாஜி ஸ்ரீராம் இசையமைத்துள்ளார். டிரைலரைப் பார்க்கும் போதே விஜய் ஆண்டனி மற்றும் சுவாசிகா ஆகியோரின் நடிப்பு கிராமத்து கதைகளத்திற்கு மிகவும் கச்சிதமாக பொருந்தியிருப்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், பிரபல இயக்குனர் எச். வினோத் 'நூறு சாமி' திரைப்படத்தை பிரத்யேகமாகப் பார்த்துள்ளார். படத்தைப்பார்த்து நெகிழ்ந்துபோன அவர், படம் குறித்த தனது முதல் விமர்சனத்தை பகிர்ந்துள்ளார்.
"இப்போது தான் 'நூறு சாமி' படத்தை பார்த்தேன். மிகவும் அருமையான படம், இந்த வருடத்தின் சிறந்த படம் என்பேன். கண்டிப்பாக அனைவரும் திரையரங்கிற்கு சென்று பார்க்கக் கூடிய திரைப்படம்" என எச்.வினோத் பாராட்டியுள்ளார்.
முன்னணி இயக்குனர் ஒருவரே படத்தை இந்த ஆண்டின் சிறந்த படம் என பாராட்டியுள்ளது, 'நூறு சாமி' படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது. 'பிச்சைக்காரன்' போலவே இந்த படமும் சென்டிமென்ட் மற்றும் எமோஷனல் ரீதியாக ரசிகர்களைக் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 Comments
No comments yet. Be the first to comment.