23 ஆண்டுகளாக என்னை கொல்ல முயற்சிக்கிறீர்கள்.. விமர்சகர்களுக்கு காட்டமாக பதிலடி கொடுத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ!
உலகக் கோப்பை தொடரில் ஸ்பெயினுக்கு எதிரான போட்டிக்கு முன் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தன்னை தொடர்ந்து விமர்சித்து வருபவர்களுக்கு போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ கடும் பதிலடி கொடுத்துள்ளார்.
பிரபல கால்பந்து வீரரும், போர்ச்சுகல் அணியின் கேப்டனுமான கிறிஸ்டியானோ ரொனால்டோ, தன்னை தொடர்ந்து விமர்சித்து வருபவர்களுக்கு கடுமையாக பதிலளித்துள்ளார். டல்லாஸில் நடைபெற்ற பிஃபா உலகக் கோப்பை தொடரின் ஸ்பெயினுக்கு எதிரான காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டிக்கு முன்பாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது பேசிய ரொனால்டோ, "நான் முன்பிருந்த அதே வீரர் அல்ல என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் என்னுடைய ஆட்டம் இன்னும் முடிந்துவிடவில்லை. இந்த உலகக் கோப்பை தொடரில் நான் மூன்று கோல்கள் அடித்திருக்கிறேன். எனவே நான் மோசமாக விளையாடவில்லை," என்று தெரிவித்தார்.
மேலும், "அணியின் வெற்றிக்காக என் உடலையும், ஆன்மாவையும் எப்போதும் அர்ப்பணிக்கிறேன். நான் களத்தில் விளையாடினாலும், விளையாடாவிட்டாலும் அணிக்காக எனக்கான முக்கிய பங்கை தொடர்ந்து ஆற்றுவேன்," என்றும் கூறினார்.
தனது ஓய்வு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "நான் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்வேன்; நீங்கள் அல்ல. இதே கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்கிறீர்கள். இதற்கு தேவையற்ற முக்கியத்துவம் கொடுக்க விரும்பவில்லை," என்றார்.
இதையடுத்து விமர்சகர்களை நோக்கி காட்டமாகப் பேசிய ரொனால்டோ, "கடந்த 23 ஆண்டுகளாக நீங்கள் என்னைக் கொல்ல முயற்சித்து வருகிறீர்கள். ஆனால் அது வீண் முயற்சி, நேர விரயம் என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். இருந்தாலும் அதையே தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறீர்கள்," என்று பதிலடி கொடுத்தார்.
செய்தியாளர் ஒருவரை சுட்டிக்காட்டி, "அவருக்கு என்னை மிகவும் பிடிக்காது என்பது எனக்குத் தெரியும்," என்று புன்னகையுடன் கூறிய ரொனால்டோ, அவரையே கேள்வி கேட்க அழைத்தார். மேலும், "எங்களை விரும்பாதவர்களின் முகங்களை நான் நன்றாக நினைவில் வைத்திருக்கிறேன்," என்றும் நகைச்சுவையாக குறிப்பிட்டார்.
ஸ்பெயினுக்கு எதிரான போட்டி ரொனால்டோவின் கடைசி உலகக் கோப்பை ஆட்டமாக அமையுமா என்பது குறித்து அவர் எந்தத் தெளிவான பதிலும் அளிக்கவில்லை. சர்வதேச கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரராக இருக்கும் அவர், தனது ஓய்வுத் திட்டத்தை வெளிப்படுத்த மறுத்தாலும், தனது கால்பந்து பயணத்தில் எந்த வருத்தமும் இல்லை என்பதை உறுதியாக தெரிவித்தார்.

0 Comments
No comments yet. Be the first to comment.