2 தொகுதி இடைத்தேர்தல்; அதிமுகவின் 40 நட்சத்திர பேச்சாளர்களுக்கு அனுமதி - தேர்தல் ஆணையம்
தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் தீவிர பிரச்சாரம் செய்வதற்காக, அதிமுக தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட 40 முக்கிய நிர்வாகிகள் கொண்ட நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலுக்கு இந்திய தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. உட்கட்சி கருத்து வேறுபாடுகள் காரணமாக சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி ஆகியோரின் பெயர்கள் விடுபட்டுள்ள நிலையில், அக்டோபர் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்தத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வரும் அக்டோபர் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது .
இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தீவிரப் பிரசாரம் மேற்கொள்வதற்காக, 40 பேர் கொண்ட நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை கட்சியின் தலைமை இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்திருந்தது. இந்தப் பட்டியலுக்கு இந்திய தேர்தல் ஆணையம் தற்போது அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளது
முக்கிய நிர்வாகிகள் பட்டியல்:
தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள இந்த முக்கியப் பட்டியலில்
- அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
- துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி
- பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன்
- கொள்கை பரப்புச் செயலாளர் தம்பிதுரை
- தேர்தல் பிரிவுச் செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட 40 முக்கிய நிர்வாகிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன
வேட்பாளர்கள் மற்றும் 5 முனை போட்டி:
இந்த இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் அதிமுக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் கணிதா சம்பத் மற்றும் தாராபுரம் தொகுதியில் பானுமதி ஆகியோர் களம் காண்கிறார்கள் இத்தொகுதிகளில் அதிமுக, திமுக, தவெக, நாம் தமிழர் மற்றும் கம்யூனிஸ்டு என 5 முனை போட்டி நிலவுவதால் தேர்தல் களம் இப்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது.
விடுபட்ட முக்கிய பெயர்கள் - உட்கட்சி சர்ச்சை:
இந்த நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் அதிமுகவின் முக்கிய மூத்த தலைவர்களும், முன்னாள் அமைச்சர்களுமான சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோரின் பெயர்கள் இடம்பெறவில்லை
கடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, தமிழகத்தில் புதிய ஆட்சிக்கு ஆதரவளிப்பது தொடர்பாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும், வேலுமணி - சி.வி.சண்முகம் தரப்புக்கும் இடையே நீடித்து வரும் கடுமையான உட்கட்சி மற்றும் கருத்து வேறுபாடுகள் காரணமாகவே இவர்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது . முன்னதாக இவர்களின் மாவட்டச் செயலாளர் பதவிகளும் பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரும் செப்டம்பர் 25, 26 மற்றும் அக்டோபர் 3-ஆம் தேதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் தீவிர பிரசாரம் செய்யத் திட்டமிட்டுள்ளார்.

0 Comments
No comments yet. Be the first to comment.