16 ஆயிரம் பேரை பாதித்த டெங்கு காய்ச்சல்: தவெக அரசின் அலட்சியப்போக்கு நிர்வாக சீர்கேட்டின் உச்சம் - சீமான் கண்டனம்!
தமிழ்நாட்டில் வேகமாகப் பரவி வரும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க தவெக அரசு எவ்வித ஆக்கப்பூர்வமான நோய்த்தடுப்பு நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வன்மையாகக் கண்டனம் தெரிவித்துள்ளார். மாநிலத்தில் இதுவரை 16,577 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 9 பேர் உயிரிழந்துள்ள சோகமான சூழ்நிலையில், அரசின் இந்த அலட்சியப்போக்கு நிர்வாக சீர்கேட்டின் உச்சம் என்றும் அவர் தனது அறிக்கையில் சாடியுள்ளார்.
நாள்தோறும் அதிகரிக்கும் பாதிப்புகள்:
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு காய்ச்சல் மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது. இதனால் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வரும் செய்தி மிகுந்த கவலையையும், வேதனையையும் அளிக்கிறது.
கடந்த ஒரே நாளில் மட்டும் மாநிலம் முழுவதும் புதிதாக 244 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தலைநகர் சென்னையில் மட்டுமே ஒரே நாளில் 87 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது நிலைமையின் தீவிரத்தைக் காட்டுகிறது.
புள்ளிவிவரங்களும் உயிரிழப்புகளும்:
மாநிலம் முழுவதும் இதுவரை ஒட்டுமொத்தமாக 16,577 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இதன் தாக்கம் மிக வீரியமாக உள்ளது. மேலும், டெங்கு காய்ச்சலின் கொடுமையால் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற துயரச் செய்தி ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த ஆறுதலைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களின் துயரிலும் பங்கெடுக்கின்றேன்.
அரசின் அலட்சியப்போக்கு:
மழைக்காலம் தொடங்கவுள்ள தற்போதைய நிலையில், பருவநிலை மாறுதல் காரணமாக சளி, காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு தொற்றுநோய்கள் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரிடமும் அதிவேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக கொசுக்களின் மூலம் பரவக்கூடிய இந்த டெங்கு காய்ச்சல் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் அச்சுறுத்தி வருகிறது.
ஒவ்வொரு நாளும் சராசரியாக 300 பேர் வரை பாதிக்கப்படுவதால் மக்களிடையே பெரும் பயமும் பீதியும் ஏற்பட்டுள்ளது. இத்தகைய ஆபத்தான சூழலிலும், பரவலைத் தடுக்க தவெக அரசு எவ்வித ஆக்கப்பூர்வமான முன்னெச்சரிக்கை அல்லது நோய்த்தடுப்பு நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. அரசின் இந்த மந்தமான செயல்பாடும், அலட்சியப்போக்கும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வழித்தெரியாமல் தவித்து வரும் நிலையில், தமிழக அரசு உடனடியாகப் போர்க்கால அடிப்படையில் தூய்மைப் பணிகளையும், கொசு ஒழிப்பு நடவடிக்கைகளையும் முடுக்கிவிட வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.

0 Comments
No comments yet. Be the first to comment.