பெண் நிர்வாகி அளித்த புகாரின் பேரில், பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் அவரது கட்சிப் பொறுப்புகளில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
பாஜக பெண் நிர்வாகி ஒருவர் அளித்த பாலியல் புகாரைத் தொடர்ந்து, மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அதிரடியாக இந்த முடிவை அறிவித்தார்.
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியில் பரபரப்பான நிகழ்வு ஒன்று அரங்கேறியுள்ளது. கட்சியின் மாநில பொதுச்செயலாளராக பதவி வகித்து வந்த கருப்பு முருகானந்தம் (எம். முருகானந்தம்), தன் பதவியிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக, பாஜகவின் பெண் நிர்வாகி ஒருவர், கருப்பு முருகானந்தம் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும், மிரட்டல் விடுப்பதாகவும் குற்றம்சாட்டி, அவரைப் பதவியில் இருந்து நீக்கக் கோரி கட்சியின் தேசியத் தலைமைக்கு கடிதம் எழுதியிருந்தார். சந்தோஷ், மாநிலப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட மூத்த தலைவர்களிடமும் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ புகார் அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இந்தப் புகாரைத் தொடர்ந்து, கட்சித் தலைமை உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சியின் நற்பெயருக்குப் பெரும் களங்கம் விளைவிக்கும் வகையிலும் கருப்பு முருகானந்தம் தொடர்ந்து செயல்பட்டு வந்த காரணத்தினால், அவர் வகித்து வந்த மாநிலப் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து உடனடியாக நீக்கப்படுவதாகத் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கை, பாஜகவின் தமிழ்நாடு அமைப்பில் உள் கட்சி ஒழுக்கம் தொடர்பான விவகாரங்களை மிகவும் தீவிரமாக கையாள்வதாக கட்சி தரப்பில் காட்டும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, பெண் நிர்வாகிகள் பாதுகாப்பு தொடர்பான புகார்கள் எழும்போது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்ற செய்தியை இந்த நீக்கம் மூலம் கட்சித் தலைமை வலியுறுத்தியுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இந்த சம்பவம் தமிழ்நாடு அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கருப்பு முருகானந்தம் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக மேலும் விசாரணை நடைபெறுமா, கட்சி மேலும் என்ன நடவடிக்கை எடுக்கும் என்பது குறித்து இன்னும் தெளிவு வர வேண்டியுள்ளது.

0 Comments
No comments yet. Be the first to comment.