வங்கி மேலாளரை காரில் கடத்தி ரூ.7 லட்சம் பறிப்பு: 2 பேர் கைது; மேலும் 4 பேருக்கு போலீஸ் வலை!
குற்றாலத்துக்குச் சென்ற அருப்புக்கோட்டை வங்கி மேலாளரைச் செயலி மூலம் அறிமுகமான கும்பல் காரில் கடத்தி, தாக்கி மிரட்டி வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.7 லட்சம் வரை பறித்ததாகப் புகார். இந்த வழக்கில் இருவரைக் கைது செய்த கடையநல்லூர் போலீசார், மேலும் நான்கு பேரைத் தேடி வருகின்றனர்.
தென்காசி:
குற்றாலத்துக்கு அருவியில் குளிக்கச் சென்ற வங்கி மேலாளரை, செயலி மூலம் அறிமுகமான நபர்கள் காரில் கடத்திச் சென்று தாக்கி மிரட்டி, அவரது வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.7 லட்சம் வரை பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக இருவரைக் கைது செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள மேலும் நான்கு பேரைத் தேடி வருகின்றனர்.
செயலி மூலம் அறிமுகம்
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள பாளையம்பட்டியைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி (42). இவர் அப்பகுதியில் உள்ள அரசு வங்கி ஒன்றில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இவர் தனது செல்போனில் ‘கிரைண்டர்’ (Grindr) செயலியைப் பயன்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவத்தன்று பொன்னுச்சாமி குற்றாலத்துக்கு அருவியில் குளிப்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது வழக்கம்போல் தனது செல்போனில் செயலியைப் பயன்படுத்தியபோது, அதன் மூலம் மர்ம நபர் ஒருவர் அவருக்கு அறிமுகமாகியுள்ளார். இருவரும் பேசிப் பழகிய நிலையில், அந்த நபர் கடையநல்லூர் அருகே உள்ள அச்சம்பட்டி மிலிட்டரி கேண்டீன் பகுதிக்கு வருமாறு பொன்னுச்சாமியை அழைத்துள்ளார்.
காரில் கடத்தி தாக்குதல்
அந்த அழைப்பை நம்பி பொன்னுச்சாமி குறிப்பிட்ட இடத்துக்குச் சென்றுள்ளார். அங்கு செயலி மூலம் அறிமுகமான நபர், ஓட்டுநருடன் காரில் வந்துள்ளார். பின்னர், பொன்னுச்சாமியை வலுக்கட்டாயமாகக் காரில் ஏற்றிக் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது.
கார் தென்காசி சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, கடையநல்லூர் இடைகால் பேருந்து நிறுத்தம் அருகே மேலும் நான்கு பேர் அந்தக் காரில் ஏறியுள்ளனர். தொடர்ந்து, காருக்குள்ளேயே பொன்னுச்சாமியை அந்தக் கும்பல் மாறி மாறித் தாக்கி மிரட்டியதாகத் தெரிகிறது.
இதனால் அச்சமடைந்த பொன்னுச்சாமியிடம் இருந்த ரூ.1,000 ரொக்கம், செல்போன் மற்றும் ஏ.டி.எம். அட்டை உள்ளிட்ட பொருட்களை அந்தக் கும்பல் பறித்துள்ளது. மேலும், அவரது வங்கிக் கணக்குகளில் உள்ள பணத்தைப் பறிக்கும் நோக்கில் வங்கிக் கணக்கு விவரங்களையும் ரகசியக் குறியீடுகளையும் கேட்டுத் தெரிந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.7 லட்சம் பறிப்பு
பின்னர், பொன்னுச்சாமியைச் சாலையோரத்தில் இறக்கிவிட்டு, அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் அருகிலிருந்த ஏ.டி.எம். மையத்துக்குச் சென்று அவரது வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுத்துள்ளனர். அதன்பிறகும் அவரை மிரட்டி, மற்ற வங்கிக் கணக்குகள் தொடர்பான விவரங்களைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, செல்போன் வழியாக இணைய வங்கிச் சேவையைப் பயன்படுத்தி பணப் பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது. விருதுநகர் கிளை வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் மற்றும் ரூ.4 லட்சமும், அருப்புக்கோட்டை கிளை வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1 லட்சமும் எடுத்ததாகக் கூறப்படுகிறது. ஏ.டி.எம். மூலம் எடுக்கப்பட்ட தொகையையும் சேர்த்து, மொத்தமாக சுமார் ரூ.7 லட்சம் வரை பறிக்கப்பட்டதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜபாளையம் வரை காரில் அழைத்துச் சென்று மிரட்டல்
பொன்னுச்சாமியின் கணக்குகளில் இருந்து பணம் எடுப்பதும், இணையவழிப் பரிமாற்றங்களும் முடியும் வரை அந்தக் கும்பல் அவரைக் காரிலேயே வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், ராஜபாளையம் வரை அவரை அழைத்துச் சென்றுள்ளனர்.
தங்களது திட்டம் முடிந்ததும், இந்தச் சம்பவம் குறித்து வெளியே யாரிடமாவது தெரிவித்தால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர். அதன்பிறகு, பொன்னுச்சாமியைக் கடையநல்லூர் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகத் தெரிகிறது.
போலீசில் புகார்: இருவர் கைது
பணத்தை இழந்த பொன்னுச்சாமி, கடையநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.
விசாரணையில், இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் திருநெல்வேலி சங்கர் நகர் வடக்கு சிதம்பர நகரைச் சேர்ந்த ஆறுமுகத்தின் மகன் நாகராஜன் (28), மேலப்பாளையம் சிவராஜபுரத்தைச் சேர்ந்த முத்துசெல்வன் (23) ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

0 Comments
No comments yet. Be the first to comment.