மிதக்கும் கோயம்பேடு மார்க்கெட்: மழையால் முடங்கிய வியாபாரம்!
சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் கோயம்பேடு மார்க்கெட்டில் தண்ணீர் தேங்கி வியாபாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தேங்கியுள்ள தண்ணீரை உடனடியாக அகற்ற வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், ஆசியாவின் மிகப்பெரிய சந்தையான கோயம்பேடு காய்கறி மற்றும் பூ மார்க்கெட்டிற்குள் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. மார்க்கெட்டின் நுழைவு வாயில்கள், நடைபாதைகள் மற்றும் கடைகளின் முன்பு தண்ணீர் நிற்பதால் வியாபாரிகளும் மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். பல இடங்களில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து ஓடுவதால் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. தண்ணீர் தேக்கத்தின் காரணமாக, மார்க்கெட்டுக்கு வரும் மக்களின் கூட்டமும் சில்லறை வியாபாரிகளின் வருகையும் வெகுவாகக் குறைந்துவிட்டது. இதனால் தங்களது அன்றாட வியாபாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து மழை பெய்து வருவதால், மோட்டார்களைப் பயன்படுத்தி தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், மழைநீர் வடிகால்களை போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய மார்க்கெட் நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 Comments
No comments yet. Be the first to comment.