தமிழக உள்ளாட்சித் தேர்தல் தள்ளிவைப்பு: மார்ச் 2027-க்குப் பிறகே நடக்கும் எனத் தகவல்!
தமிழகத்தில் வார்டு மறுசீரமைப்பு, இடைத்தேர்தல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு காரணமாக உள்ளாட்சித் தேர்தல் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பிறகுதான் நடைபெறும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், வார்டு மறுசீரமைப்புப் பணிகள், இடஒதுக்கீடு, இடைத்தேர்தல் மற்றும் வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு போன்ற முக்கிய காரணங்களால் தேர்தல் தள்ளிப்போகிறது. இதனால் அடுத்த ஆண்டு (2027) மார்ச் மாதத்திற்குப் பிறகே தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைந்ததால் நிர்வாகத்தைக் கவனிக்க தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்
ஏற்கனவே பதவிக்காலம் முடிந்த மற்ற 28 மாவட்டங்களில் உள்ள தனி அதிகாரிகளின் பதவிக்காலமும் 2027 ஏப்ரல் 19 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதேபோல, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் 5 ஆண்டு பதவிக்காலமும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முடிவடைகிறது.தற்போது 46 கிராமப்புற உள்ளாட்சிகளை நகர்ப்புறங்களுடன் இணைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. மேலும், டிசம்பர் வரை பருவமழை பணிகளும், பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகளும் இருப்பதால், முழுமையான மறுசீரமைப்புப் பணிகள் முடிந்த பின்னரே கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என அரசு தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

0 Comments
No comments yet. Be the first to comment.