சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அரசுக்கு கூடுதல் கவனம் தேவை - திருமாவளவன் வலியுறுத்தல்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அரியலூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
அரியலூர் மாவட்டம் கோவிந்தபுரம் ஊராட்சியில் அமைக்கப்பட்ட அரங்க மேடை, பார்பனச்சேரி ஊராட்சியில் பகுதி நேர ரேஷன் கடை மற்றும் மேலப்பழுவூர் ஊராட்சியில் சமுதாயக்கூடம் ஆகியவற்றை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் நேற்று திறந்து வைத்தார்.பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க மாநில அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
மேலும், மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலை நடந்துள்ள இந்தச் சூழலில் தேர்தல் ஆணையம் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்வது ஏற்புடையதல்ல என்றும், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் சதி முயற்சிகளை முறியடிக்க தேசிய அளவில் ஜனநாயக சக்திகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.நடிகர் தனுஷ் அரசியல் வருகை குறித்து பேசிய அவர், தனுஷ் மட்டுமல்லாது இந்த ஜனநாயக கட்டமைப்பில் அனைவருக்கும் அரசியலில் ஈடுபடும் உரிமையும், முழு சுதந்திரமும் உள்ளது என்று குறிப்பிட்டார். மேலும், செஞ்சியில் காணாமல் போன சிறுமியை சிபிசிஐடி போலீசார் விரைந்து கண்டுபிடித்துவிடுவார்கள் என நம்புவதாகவும் திருமாவளவன் தெரிவித்தார்.

0 Comments
No comments yet. Be the first to comment.