பெண் குரலில் பேசி பல லட்சங்கள் சுருட்டிய 'உலக மகா கேடி': தெலுங்கானா ஹனி ட்ராப் மோசடி!
சமூக வலைத்தளங்களில் போலி கணக்குகளைத் தொடங்கி, மிமிக்ரி மூலம் பெண் குரலில் பேசி பல ஆண்களை வலையில் வீழ்த்திய தெலுங்கானா இளைஞரின் 'ஹனி ட்ராப்' மோசடி அம்பலமாகியுள்ளது. வி.ஐ.பி-கள் முதல் வெளிநாட்டவர் வரை பலரை மிரட்டி சுமார் 28 லட்சம் ரூபாய் வரை இவன் பணம் பறித்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது
தெலுங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டத்தை சேர்ந்த 23 வயதான பவன்குமார் என்ற இளைஞர், டிஜிட்டல் தொழில்நுட்பத்தையும் தனது குரல் மாற்றும் திறமையையும் பயன்படுத்தி மிகப்பெரிய 'ஹனி ட்ராப்' (Honey Trap) மோசடியில் ஈடுபட்டு கைதாகியுள்ளார். மிமிக்ரி கலைஞரான இவர், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் 'சந்தனா' என்ற பெயரில் மாடலிங் அழகியின் புகைப்படங்களை வைத்து 27-க்கும் மேற்பட்ட போலி கணக்குகளை தொடங்கி இந்த நூதன மோசடியை அரங்கேற்றியுள்ளார்.இந்த வலையில் விழும் ஆண்களின் நட்பு கோரிக்கையை ஏற்று பழகும் பவன்குமார், தனது மிமிக்ரி திறமையால் தொலைபேசியில் அச்சு அசலாக பெண் குரலிலேயே பேசி அவர்களை சபலப்பட வைத்துள்ளார். இரகசியமாக பாலியல் ரீதியான வீடியோ கால்கள் மற்றும் புகைப்படங்களை சேகரித்துக் கொண்ட பிறகு, திடீரென அந்தப் பெண்ணின் அண்ணன் போலப் பேசி, "பணம் தரவில்லையென்றால் போலீசில் புகார் அளிப்பேன்" என்று மிரட்டி பணம் பறிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.
இவருடைய இந்த ஏமாற்று வேலை தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா என இந்தியா முழுவதும் மட்டுமின்றி சவுதி அரேபியா, கனடா, பாகிஸ்தான், துருக்கி போன்ற வெளிநாடுகளிலும் விரிவடைந்துள்ளது. ஓராண்டாக நடைபெற்ற இந்த மோசடியில் முக்கிய வி.ஐ.பி-க்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட பலர் சிக்கியுள்ளதால், பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களை வெளியிட போலீசார் மறுத்துவிட்டனர்.
தனது நண்பர் ரமேஷ் என்பவருடன் ஏற்பட்ட மோதலில் அவர் அளித்த புகாரின் பேரில், பவன்குமாரின் இந்த மோசடி அம்பலமானது. ஹைதராபாத் போலீசாரின் தீவிர விசாரணையில், அவரிடமிருந்து 1200 பாலியல் உரையாடல்கள், வீடியோக்கள் அடங்கிய லேப்டாப், பென் டிரைவ் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், இதுவரை 28 லட்சம் ரூபாய் பணமும் மீட்கப்பட்டுள்ளது. தற்போது தடயவியல் துறையினரின் உதவியுடன் அடுத்தக்கட்ட விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

0 Comments
No comments yet. Be the first to comment.