சேலத்தில் பட்டப்பகலில் பயங்கரம்: போலீசில் கையெழுத்திட்டு திரும்பிய பிரபல ரவுடி ஓடஓட விரட்டி படுகொலை!
சேலத்தில் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் கையெழுத்திட்டுவிட்டுத் திரும்பிய பிரபல ரவுடி டேவிட் (எ) உதயகுமார், மக்கள் நடமாட்டம் மிகுந்த புதுரோடு மேம்பாலத்தில் 5 பேர் கொண்ட மர்ம கும்பலால் பட்டப்பகலில் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்
சேலம் ஜங்ஷன் அருகே உள்ள புதுரோடு மேம்பாலத்தில் இன்று பட்டப்பகலில் கொடூரமான கொலைச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. சேலத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த பிரபல ரவுடியான டேவிட் என்கிற உதயகுமார் என்பவரை மர்ம கும்பல் ஒன்று நடுரோட்டில் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் அரங்கேறியுள்ள இந்தத் துணிகரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கொலை செய்யப்பட்ட டேவிட் மீது சேலம் மத்திய சிறையின் முன்னாள் வார்டன் மாதேஷ் கொலை வழக்கு, ஆள் கடத்தல், வழிப்பறி என பல்வேறு குற்ற வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. இவர் காவல் துறையினரால் சரித்திரப் பதிவேடு குற்றவாளியாக (History sheeter) அறிவிக்கப்பட்டவர் ஆவார். இந்நிலையில், பொருளாதார குற்ற வழக்கு ஒன்றில் முன்ஜாமீன் பெற்ற அவர், நிபந்தனையின் அடிப்படையில் நாள்தோறும் காவல் நிலையத்திற்குச் சென்று கையெழுத்திட்டு வந்துள்ளார்.
இன்று காலையிலும் அவர் வழக்கம்போல் பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்குச் சென்று கையெழுத்திட்டுள்ளார். பின்னர் அங்கிருந்து தனது இருசக்கர வாகனத்தில் திரும்பிச் சென்று கொண்டிருந்தார். புதுரோடு மேம்பாலம் அருகே வந்தபோது, இருசக்கர வாகனங்களில் அவரைப் பின்தொடர்ந்து வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை திடீரென வழிமறித்தது. நிலைமையைப் புரிந்து கொண்டு அவர் தப்ப முயன்றபோது, அந்த கும்பல் அவரை ஓடஓட விரட்டி தலையின் பின்புறம் மற்றும் முதுகில் சரமாரியாக வெட்டிச் சாய்த்தது.கொலை செய்துவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச் சென்ற அந்த 5 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் தற்போது தீவிரமாகத் தேடி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், டேவிட்டின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். எப்போதும் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த மேம்பாலத்தில், பட்டப்பகலில் ஒருவரை நடுரோட்டில் வெட்டிக் கொன்ற சம்பவம் சேலம் மக்களிடையே பெரும் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

0 Comments
No comments yet. Be the first to comment.