தொடரும் கைதிகள் தப்பியோட்டம்: முதலமைச்சரைக் கடுமையாகச் சாடிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்!
புழல் மற்றும் தேனியைத் தொடர்ந்து கோவை மத்தியச் சிறையிலும் கைதி தப்பியோடிய சம்பவத்தைக் கண்டித்து, மாநில அரசையும் முதலமைச்சரையும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சமீபகாலமாக சிறைச்சாலைகளில் இருந்து கைதிகள் தப்பிச் செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. சென்னை புழல் சிறை மற்றும் தேனி சிறையைத் தொடர்ந்து, தற்போது கோவை மத்தியச் சிறையில் இருந்தும் ராகவன் என்ற கைதி தப்பிச் சென்றுள்ளார். அடுத்தடுத்த இந்த சிறை மீறல்கள் காவல் துறையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மீது கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளன. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தொடர் சம்பவங்களைக் குறிப்பிட்டு, தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின் மாநில அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தனது எக்ஸ் (X) தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள கண்டனப் பதிவில், "இந்த சோப்ளாங்கி ஆட்சியில் புழல், தேனியைத் தொடர்ந்து கோவை மத்தியச் சிறையில் இருந்தும் ஒரு கைதி தப்பிச் சென்றுள்ளார். அடுத்து பாளையம்கோட்டையா? சேலமா? எனக் கைதிகள் inky pinky ponky போட்டுத் தப்பிச் செல்லும் அளவுக்கு டம்மி (Dummy) முதலமைச்சரின் ஆட்சி லட்சணம் இருக்கிறது" என்று மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
மேலும் தனது கண்டனத்தில், தோல்வி பயத்தில் முதலமைச்சர் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்குச் செல்வதாகவும், இது கையாலாகாத அரசு எனத் தெரிந்து கொண்டு கைதிகள் தப்பியோடுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். "இனி பணியிடமாற்றம், சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றால் முதலமைச்சர் தன்னைத் தானே தான் செய்துகொள்ள வேண்டும். 'மெத்' அரசின் மெத்தனப் போக்கால் தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பு தொடர்ந்து கேள்விக்குறி ஆகி வருவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்" எனவும் உதயநிதி ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் தேனி தேக்கம்பட்டி சிறையில் இருந்து 17 கைதிகள் காவலர்களைத் தாக்கிவிட்டுத் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த விவகாரத்தில் சிறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அப்போது, மெத்தனமாகச் செயல்படும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் விஜய் எச்சரித்திருந்தார். அந்த எச்சரிக்கை ஓய்வதற்குள் கோவையில் இச்சம்பவம் நடந்துள்ளது சட்டம் ஒழுங்கு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் காவல் துறையின் இந்த அலட்சியப் போக்கைக் கண்டித்து வருவது குறிப்பிடத்தக்கது.

0 Comments
No comments yet. Be the first to comment.