பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலக விவகாரம்: மீனவர்களுக்குப் பச்சைத் துரோகம் என தவெக அரசு மீது சீமான் பாய்ச்சல்!
பட்டினப்பாக்கத்தில் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து, புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் தவெக அரசின் முடிவை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வன்மையாகக் கண்டித்துள்ளார். கருத்துக்கேட்புக் கூட்டத்தை அரசு மறைமுகமாக நடத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் 1,200 கோடி ரூபாய் செலவில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கத் தவெக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்தே அப்பகுதி மீனவ மக்கள் இத்திட்டத்திற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். மக்களின் தொடர் எதிர்ப்பைப் புறந்தள்ளிவிட்டு, அங்குதான் புதிய செயலகத்தைக் கட்டியே தீருவோம் என தவெக அரசு பிடிவாதம் பிடிப்பது வன்மையான கண்டனத்திற்குரியது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
இந்தத் திட்டம் தொடர்பாக அரசு சமீபத்தில் நடத்திய கருத்துக்கேட்புக் கூட்டம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போராடும் சங்கப் பிரதிநிதிகளையும், உண்மையான கிராமப் பிரதிநிதிகளையும் அழைக்காமல், ஒவ்வொரு கிராமத்திலும் தங்களுக்குச் சாதகமான யாரோ ஒருவரை மட்டும் தொலைபேசியில் அழைத்து அரசு மறைமுகமாகக் கூட்டத்தை நடத்தியுள்ளதாக சீமான் குற்றம் சாட்டியுள்ளார். இது மக்களின் உண்மையான கருத்தைக் கேட்பதற்கான கூட்டமா அல்லது மக்கள் திட்டத்தை ஏற்றுக்கொண்டதாகக் கணக்குக் காட்டுவதற்கான ஏற்பாடா என அவர் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள நிலம், உண்மையில் மீனவர்களுக்குக் குடியிருப்புகள் கட்டப்பட வேண்டிய இடமாகும். தங்கள் வாழ்விடத்தைக் காக்க மீனவர்கள் கருப்புக்கொடி ஏந்தித் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வளவு நியாயமான எதிர்ப்புகளுக்குப் பிறகும் தவெக அரசு அதே இடத்தில் செயலகம் அமைக்க முயல்வது, மீனவ மக்களுக்குச் செய்யும் 'பச்சைத் துரோகம்' என்று சீமான் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தையும் அதற்கான தொடர் நடவடிக்கைகளையும் தவெக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். 12 மீனவ கிராம மக்களுக்கும், அவர்கள் தேர்வு செய்யும் உண்மையான பிரதிநிதிகளுக்கும் முறையான எழுத்துப்பூர்வ அழைப்பு விடுத்து, அரசு வெளிப்படையான முறையில் கருத்துக்கேட்புக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

0 Comments
No comments yet. Be the first to comment.