சில்லறை தகராறில் ஓடும் பேருந்திலிருந்து தள்ளிவிடப்பட்ட பெண் நடத்துநர் பலி – பயணி கைது!
தெலுங்கானாவில் சில்லறை கொடுப்பதில் ஏற்பட்ட தகராறில் ஓடும் பேருந்திலிருந்து பெண் நடத்துநரை பயணி ஒருவர் கீழே தள்ளியுள்ளார். படுகாயமடைந்த நடத்துநர் 9 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்த நிலையில், வழக்கைக் கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தெலுங்கானாவில் பேருந்து பயணத்தின்போது ஏற்பட்ட சில்லறை பிரச்சினை விபரீதத்தில் முடிந்துள்ளது. மீதமுள்ள சில்லறைப் பணத்தை உடனடியாக வழங்காததால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், பெண் பயணி ஒருவர் ஓடும் பேருந்திலிருந்து பெண் நடத்துநரை கீழே தள்ளியுள்ளார். இதில் படுகாயமடைந்த நடத்துநர் 9 நாட்கள் தீவிர சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சில்லறை கொடுப்பதில் ஏற்பட்ட தகராறு
தெலுங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டத்தில் உள்ள மணுகூரு பணிமனைக்குச் சொந்தமான அரசுப் பேருந்து, கடந்த மாதம் 25-ஆம் தேதி பத்ராசலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
அப்போது மவுனிகா என்ற பெண் தனது மகனுடன் பேருந்தில் பயணம் செய்துள்ளார். மகனுக்கான பயணச்சீட்டை வாங்குவதற்காக நடத்துநர் குண்ட்லா பிரவலிகாவிடம் ரூ.100 நோட்டைக் கொடுத்துள்ளார்.
இதையடுத்து, ரூ.10 மதிப்பிலான பயணச்சீட்டை வழங்கிய நடத்துநர், மீதமுள்ள ரூ.90-க்கு சில்லறை இல்லாததால், இறங்கும்போது பெற்றுக்கொள்ளுமாறு பயணச்சீட்டின் பின்புறத்தில் எழுதி கொடுத்துள்ளார்.
ஓடும் பேருந்திலிருந்து தள்ளிய பயணி
ஆனால், மவுனிகா உடனடியாக மீதமுள்ள பணத்தைத் தர வேண்டும் எனக் கூறி நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பேருந்து மித்தகுடெம் கிராமத்தின் அருகே சென்றபோது, இருவருக்கும் இடையேயான வாக்குவாதம் முற்றியுள்ளது.
அப்போது ஆத்திரமடைந்த மவுனிகா, பேருந்தின் வாசலில் இருந்த நடத்துநர் பிரவலிகாவை திடீரென வெளியே தள்ளியுள்ளார். இதனால் நிலைதடுமாறி சாலையில் விழுந்த பிரவலிகாவின் கால்கள் மீது பேருந்தின் பின்பக்க சக்கரங்கள் ஏறி இறங்கின.
9 நாட்கள் போராட்டம்... சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
இந்த விபத்தில் பிரவலிகாவின் வலது கால் முற்றிலும் நசுங்கியதுடன், இடது காலிலும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக மீட்கப்பட்ட அவர், முதலுதவிக்குப் பிறகு ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு கடந்த 9 நாட்களாக உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த பிரவலிகா, செவ்வாய்க்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 24.
கொலை வழக்காக மாற்றிய போலீசார்
இந்தச் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே மவுனிகாவைக் கைது செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்துள்ளனர். தற்போது நடத்துநர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கைக் கொலை வழக்காக மாற்றி விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவிப்பு
நடத்துநர் பிரவலிகாவின் உயிரிழப்புக்கு தெலுங்கானா போக்குவரத்துத் துறை அமைச்சர் பொன்னம் பிரபாகர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும், அவரது தாயாருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். குடும்பத்தினருக்கு இந்திரம்மா வீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

0 Comments
No comments yet. Be the first to comment.