மாற்றுக்கட்சி எம்.எல்.ஏ-க்களை வாங்கும் TVK அரசுக்கு, மக்களுக்கான வெங்காயம் வாங்கத் தெரியாதா? - முதலமைச்சர் விஜய்யை வெளுத்து வாங்கிய உதயநிதி!
எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்குவதில் காட்டும் ஆர்வத்தை, மக்களுக்கான வெங்காயத்தை வாங்குவதில் முதலமைச்சர் விஜய் காட்டவில்லை" என விமர்சித்துள்ள உதயநிதி ஸ்டாலின், அழுகிய நிலையில் வீணாகும் 450 டன் வெங்காயத்தை வைத்து அரசை கடுமையாக சாடியுள்ளார்.
மாற்றுக்கட்சி எம்.எல்.ஏ-க்களை வளைத்துப் போடுவதில் மட்டுமே அதிக கவனம் செலுத்தும் தவெக (TVK) தலைவரும் முதலமைச்சருமான விஜய்க்கு, மக்களின் அடிப்படைத் தேவையான வெங்காயத்தை உருப்படியாக வாங்கத் தெரியவில்லையா என உதயநிதி ஸ்டாலின் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். "எம்.எல்.ஏ-க்களை வாங்க தெரிந்த டம்மி முதலமைச்சருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா?" என நேரடியாகக் கேள்வி எழுப்பியுள்ள அவர், "உரிக்க உரிக்க எப்படி ஒன்றுமில்லையோ, அதுபோலத்தான் இந்த அரசும்" என வெங்காயத்தை உவமையாகக் கூறி சாடியுள்ளார்.
ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு வழங்குவதற்காக, எவ்வித முன் ஆய்வும் இன்றி 450 டன் வெங்காயத்தை தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பிடம் இருந்து மாநில அரசு கொள்முதல் செய்துள்ளது. மகாராஷ்டிராவிலிருந்து ரயிலில் வந்திறங்கிய அந்த வெங்காயம் முற்றிலும் அழுகி, தரமற்ற நிலையில் இருந்துள்ளது. அரசின் இந்த நிர்வாகச் சீர்கேட்டை மக்கள் மத்தியில் மறைப்பதற்காக, அந்த அழுகிய வெங்காய மூட்டைகளை கொருக்குப்பேட்டை ரயில் முனையத்திலேயே ஆட்சியாளர்கள் கேட்பாரற்று விட்டுவிட்டதாக உதயநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
நாட்கள் செல்லச் செல்ல வெங்காயம் அழுகி நாற்றமெடுக்கத் தொடங்கியதும், "நாங்கள் வெங்காயம் வாங்கவில்லை, கொருக்குப்பேட்டை ரயில் முனையத்தில் இருக்கும் வெங்காயத்திற்கும் அரசுக்கும் தொடர்பில்லை" என அரசு தரப்பிலேயே பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதாக அவர் விமர்சித்துள்ளார். மேலும், அந்த அழுகிய வெங்காயத்தின் ஒரு பகுதியை லாரிகளில் ஏற்றி திருச்சி காந்தி மார்க்கெட்டிற்கு விற்க அனுப்பியுள்ளனர். ஆனால், தரமற்ற அந்த வெங்காயத்தைப் பார்த்த திருச்சி வியாபாரிகள் அதனை வாங்கத் திட்டவட்டமாக மறுத்துவிட்டதால், என்ன செய்வதென்று தெரியாமல் லாரி ஓட்டுநர்கள் தவித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்கள் வெங்காய விலையேற்றத்தால் கண்ணீர் வடிக்கும் நிலையில், முதலமைச்சர் விஜய் எந்தக் கவலையும் இல்லாமல் இடைத்தேர்தல் வேலைகளில் பிஸியாகிவிட்டதாக விமர்சித்துள்ள உதயநிதி, தரமற்ற வெங்காயத்தைக் கொள்முதல் செய்தது யார் என கேள்வி எழுப்பியுள்ளார். ஏற்கனவே ரேஷன் கடைகளில் 30 ரூபாய்க்கு பொன்னி அரிசி வழங்குவதாகக் கூறிவிட்டு, டெண்டர் விடாமல் சாதாரண அரிசிக்கு பாலிஷ் போட்டு விற்பது குறித்து தான் கேட்ட கேள்விக்கும் இதுவரை அரசிடம் இருந்து பதிலில்லை எனக் குறிப்பிட்டுள்ள அவர், இந்த முறைகேடுகளுக்கு டம்மி முதலமைச்சர் என்ன பதில் சொல்லப் போகிறார் என காட்டமாக வினவியுள்ளார்.

0 Comments
No comments yet. Be the first to comment.