சர்ச்சை பேச்சு வழக்கு வாபஸ்: திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி விடுதலை!
சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கை, பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் திரும்பப் பெற்றதால் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடியை நீதிமன்றம் விடுவித்துள்ளது.
திமுக முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான பொன்முடி மீதான சர்ச்சை பேச்சு தொடர்பான வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. அவர் மீது தொடரப்பட்ட வழக்கை புகார்தாரர் தரப்பு திரும்பப் பெற்றதை அடுத்து, நீதிமன்றம் அவரை குற்றச்சாட்டுகளிலிருந்து முழுமையாக விடுவித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2025-ம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய பொன்முடி, சைவ மற்றும் வைணவ சமயங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் சில சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
அவரது இந்தப் பேச்சு பொதுவெளியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியதோடு, பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்களைப் பெற்றது.
பொன்முடியின் பேச்சு மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் உள்ளதாகக் கூறி, சென்னை மாநகராட்சியின் பாஜக கவுன்சிலரான உமா ஆனந்தன் அவர் மீது வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், திடீர் திருப்பமாக உமா ஆனந்தன் தனது வழக்கை திரும்பப் பெறுவதாக அறிவித்தார்.
புகார்தாரரான உமா ஆனந்தன் தனது புகாரை அதிகாரப்பூர்வமாக வாபஸ் பெற்றதை அடுத்து, வழக்கின் மேற்கொண்டு விசாரணையை ரத்து செய்த நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் பொன்முடியை வழக்கிலிருந்து விடுதலை செய்து உத்தரவிட்டது. இதன் மூலம் கடந்த ஓராண்டாக நடைபெற்று வந்த இந்தச் சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.

0 Comments
No comments yet. Be the first to comment.