தங்கம் விலை ராக்கெட் வேகம்... அமெரிக்க தேர்தலுக்குப் பிறகு மீண்டும் ஏற்றம்!
அமெரிக்க தேர்தல் எதிரொலியாக தங்கம் விலையில் மீண்டும் ஏற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இரண்டு நாட்களில் சவரனுக்கு ரூ.4,680 உயர்ந்துள்ளதாக வெளியான தகவல் நகை வாங்குவோர் மத்தியில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், திடீரென தங்கம் விலை தடாலடியாக உயர்ந்துள்ளது.
வழக்கம் போல் காலையில் மாற்றம் செய்யப்படும் தங்கம் விலை மாறிய போதும் அமெரிக்க தேர்தல் எதிரொலி காரணமாக திடீரென 12 மணியளவில் மீண்டும் தங்கம் விலை மாற்றம் செய்யப்பட்டது. காலையில் கணிசமாக உயர்ந்த தங்கம் விலை, மதிய வேளையில் அதிரடியாக உயர்ந்தது.நேற்று மதிய நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.275 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,100க்கும், சவரனுக்கு ரூ.2,200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,04,800க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து இன்றும் தங்கம் விலை எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளது. அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.285 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,385க்கும், சவரனுக்கு ரூ.2,280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,07,080க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 நாட்களில் மட்டுமே தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,680 உயர்ந்துள்ளதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அதே போல 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.220 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,955க்கும், சவரனுக்கு ரூ.1,800 உயர்ந்து ஒரு சவரன் ரூ.87,640க்கும் விற்பனை செய்யப்படுகிறது..
வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.210க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்திற்கும் 10 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை தொடர்ந்து உயருமா?
அமெரிக்க டாலரின் மதிப்பு, பத்திரங்களின் வருவாய், சர்வதேச அரசியல் சூழல் மற்றும் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகித முடிவுகள் ஆகியவை தங்கத்தின் விலை மாற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
மேலும், அமெரிக்காவின் வேலைவாய்ப்பு தொடர்பான பொருளாதாரத் தரவுகள் வெளியாக உள்ளதால், முதலீட்டாளர்கள் அதையும் கவனித்து வருகின்றனர். இதனால் வரும் நாட்களில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் தொடர வாய்ப்புள்ளது.

0 Comments
No comments yet. Be the first to comment.