சரக்குக் கப்பல் சிறைபிடிக்கப்பட்டதற்குப் பதிலடி!
தனது சரக்குக் கப்பலை அமெரிக்கா சிறைபிடித்தது "கடற்கொள்ளை" என்று சாடியுள்ள ஈரான், அதற்குப் பதிலடியாக அமெரிக்கப் போர்க்கப்பல்கள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
மத்திய கிழக்குக் கடற்பகுதியில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஈரானுக்குச் சொந்தமான 'தூஸ்கா' (Touska) என்ற சரக்குக் கப்பலை அமெரிக்க கடற்படை வழிமறித்து, அதன் என்ஜின் அறையில் தாக்குதல் நடத்தி சிறைபிடித்தது. இதற்குப் பதிலடியாக, ஓமன் வளைகுடாவில் நிலைகொண்டுள்ள அமெரிக்கப் போர்க்கப்பல்களை இலக்கு வைத்து ஈரான் தனது தாக்குதலைத் தொடங்கியுள்ளது.
ஈரானின் 'ஹஸ்ரத் காதம் அல்-அன்பியா' (Hazrat Khatam al-Anbiya) ராணுவத் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச கடற்பரப்பில் பயணம் செய்த வணிகக் கப்பலை அமெரிக்கா சிறைபிடித்தது அப்பட்டமான "கடற்கொள்ளை" (Maritime Piracy) என்று விமர்சித்துள்ளது. மேலும், இந்தச் செயல் தற்போது நடைமுறையில் உள்ள போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயல் என்றும் ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்லாமாபாத்தில் நடைபெறவிருந்த இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்கப்போவதில்லை என்று ஈரான் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த ஆக்ரோஷமான நடவடிக்கையால் ஹார்முஸ் நீர்ச்சந்தி பகுதியில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளதால், உலக அளவில் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

0 Comments
No comments yet. Be the first to comment.