மீண்டும் இணைந்தாரா ரவி மோகன்? திருப்பதியில் கெனிஷாவுடன் சாமி தரிசனம் - வைரலாகும் வீடியோ!
விவாகரத்து விவகாரங்கள் மற்றும் நீதிமன்ற வழக்குகள் பரபரப்பாகச் சென்று கொண்டிருக்கும் சூழலில், நடிகர் ரவி மோகன் மற்றும் கெனிஷா பிரான்சிஸ் இருவரும் திருப்பதியில் இணைந்து சாமி தரிசனம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன், தனது மனைவி ஆர்த்தியுடனான விவாகரத்து விவகாரத்தால் கடந்த சில மாதங்களாகவே திரைத்துறையில் பெரும் விவாதப் பொருளாகியுள்ளார். இதற்கிடையே, ரவி மோகனின் தோழி என அறியப்படும் கெனிஷா பிரான்சிஸ் உடனான அவரது நட்பு குறித்தும், சமீபத்தில் அவர்கள் பிரிந்தது குறித்தும் பல்வேறு செய்திகள் உலா வந்தன. இந்நிலையில், ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவரும் மீண்டும் ஒன்றாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்த வீடியோ தற்போது வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நீதிமன்றத்தில் தொடரும் வழக்குகள்
நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி இடையேயான விவாகரத்து வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. முன்னதாக, தங்களுக்குச் சேர வேண்டிய ஸ்கூல் பீஸ் மற்றும் பராமரிப்புச் செலவுக்காக பணம் வழங்கப்படவில்லை என ஆர்த்தி தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த விவகாரத்தில், இரண்டு வாரங்களுக்குள் உரிய உத்தரவைப் பிறப்பிக்குமாறு குடும்ப நல நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், நீதிமன்ற உத்தரவை மீறி பொதுவெளியில் பேட்டி அளித்ததற்காக ரவி மோகன் சமீபத்தில் மன்னிப்பு கோரியதும் குறிப்பிடத்தக்கது.
வைரலாகும் வீடியோ
தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சட்ட சிக்கல்களுக்கு மத்தியில், ரவி மோகன் கெனிஷாவுடன் மீண்டும் திருப்பதிக்குச் சென்றிருப்பது ரசிகர்களிடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளது. கோவில் வளாகத்தில் இருவரும் இருக்கும் அந்த வீடியோ காட்சி, தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. இது குறித்து ரவி மோகன் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ விளக்கங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
இந்தச் செய்தி ரவி மோகனின் தனிப்பட்ட வாழ்க்கையில் அடுத்தகட்ட நகர்வுகளைத் தீர்மானிக்குமா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

0 Comments
No comments yet. Be the first to comment.