“யாரும் வராதீர்கள்” – லண்டனில் ரத்து செய்யப்பட்ட முதல்வர் விஜய் நிகழ்ச்சி
லண்டனில் விஜயை சந்திக்க ரசிகர்கள் திரண்டதால், திட்டமிடப்பட்டிருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் ஓட்டல் அருகே கூட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் சென்றுள்ளார். அவரது பயணத்தின் போது அவரை சந்திக்கவும் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் ரசிகர்கள் மற்றும் தமிழ் சமூகத்தினர் பெருமளவில் திரண்டனர்.
விஜய் தங்கியிருந்த ஓட்டல் அருகே ரசிகர்கள் திரண்டதால், அப்பகுதியில் பொதுமக்களின் இயல்பான போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து லண்டன் மாநகர காவல்துறையினர் கூட்டத்தை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.
நிகழ்ச்சி ரத்து
விஜயை சந்திக்கும் வகையில் திட்டமிடப்பட்டிருந்த நிகழ்ச்சிக்கு அனுமதி கிடைக்காததால் அது ரத்து செய்யப்பட்டது. விஜயுடன் சென்ற பாதுகாப்பு அதிகாரியும் லண்டன் போலீசாருடன் இணைந்து, அனைவரும் கலைந்து செல்லுமாறு கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், விஜயை சந்திப்பதற்காக ஓட்டல் வாசலில் காத்திருக்க வேண்டாம் என்றும், அவர் செல்லும் வழியிலும் காத்திருக்க வேண்டாம் என்றும் ரசிகர்களுக்கும் தமிழ் சமூகத்தினருக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜயின் லண்டன் பயணத்தின் முக்கிய நோக்கம் தொழில் முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் தொழில்துறை தொடர்பான சந்திப்புகளில் பங்கேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது பயணத்தின்போது ரூ.12,300 கோடி மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

0 Comments
No comments yet. Be the first to comment.