விஜய் லண்டன் பயணம் இன்ப சுற்றுலாவா.. முதலீடுகள் ஈர்ப்பா? - எடப்பாடி பழனிசாமி கேள்வி?
தமிழக முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் முதலீடுகளை ஈர்க்கவா அல்லது இன்ப சுற்றுலாவா என்று மக்கள் கேள்வி எழுப்புவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தவெக ஆட்சியில் ஊழல், மின்வெட்டு மற்றும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு அதிகரித்துள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
லண்டன் பயணம் முதலீட்டுக்கா? இன்ப சுற்றுலாவுக்கா?
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் சென்றுள்ளதாக தவெக அரசு கூறுவது முற்றிலும் முரணானது என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார். "சம்பந்தமில்லாத அதிகாரிகளை லண்டனுக்கு அழைத்துச் சென்று முதலீடுகளை ஈர்த்ததாக அரசு நாடகமாடுகிறது. முதலீடுகளை ஈர்க்கும் துறை சார்ந்த அமைச்சரையோ, முக்கிய அதிகாரிகளையோ உடன் அழைத்துச் செல்லாதது ஏன்? முதல்வர் விஜய்யின் இந்த லண்டன் பயணம் முதலீடுகளை ஈர்க்கவா அல்லது இன்ப சுற்றுலாவா என்று மக்கள் கேள்வி எழுப்பும் நிலை உருவாகியுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் இருக்கும் நிறுவனங்களுடன் லண்டன் வரை சென்று ஒப்பந்தம் போடுவதன் மர்மம் என்ன?" என அவர் கேள்வி எழுப்பினார்.
மின்வெட்டு விவகாரத்தில் அரசு ஏமாற்று வேலை:
தமிழகத்தில் எங்கும் மின்வெட்டே இல்லை என்று தவெக அரசு தம்பட்டம் அடித்துக் கொள்வதாகக் குறிப்பிட்ட அவர், அதே துறையின் அமைச்சர் தற்போது மின் பற்றாக்குறை இருப்பதாகக் கூறி வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்க திட்டமிடுவது ஏன் என்று சாடினார். "ஆளுங்கட்சி மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பேசும் மேடைகளிலேயே மின்வெட்டு ஏற்படுகிறது. தமிழக அமைச்சர் பேட்டி அளிக்கும்போதே மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. அதிமுக ஆட்சியில் மின் உற்பத்தியைப் பெருக்கி, அண்டை மாநிலங்களுக்கு உபரி மின்சாரம் வழங்கினோம். ஆனால், தற்போதைய தவெக அரசுக்கு நிர்வாகத் திறன் இல்லாததால் மின் கொள்முதலில் முறையான திட்டமிடல் இல்லை" என்று குற்றம் சாட்டினார்.
சட்டம்-ஒழுங்கு மற்றும் விலைவாசி உயர்வு:
மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், "கொலை, கொள்ளை, பாலியல் சீண்டல்கள் என குற்றங்கள் நடக்காத நாளே தமிழகத்தில் இல்லை. சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. மறுபுறம் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனை தவெக அரசு கட்டுப்படுத்தவே இல்லை. 'ரீல்ஸ்' போடுவதும், 'ரீல்' விடுவதும்தான் இந்த அரசின் சாதனையாக உள்ளது" என எள்ளி நகையாடினார்.
கடன் சுமையில் புதிய தலைமைச் செயலகம் தேவையா?
தமிழக அரசு ஏற்கனவே ரூ. 40,000 கோடி கடன் சுமையில் தத்தளித்துக் கொண்டிருக்கும் வேளையில், புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தேவையற்ற ஆடம்பரம் என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார். "கடன் சுமை சீரானதும் இதனைப் பற்றி யோசிக்கலாம். அதுமட்டுமன்றி, மீனவர்கள் அதிகம் வாழும் பகுதி, பொதுமக்கள் குடியிருப்புகள் மற்றும் பள்ளிகள் இருக்கும் இடத்தில் இதனை அமைக்கக் கூடாது. போக்குவரத்து நெரிசல் இல்லாத, அனைவரும் எளிதில் வந்து செல்லக்கூடிய நடுநிலையான இடத்தில் இதனை அமைக்க வேண்டும்" என்றார்.

0 Comments
No comments yet. Be the first to comment.