6-ம் வகுப்புக்கான மும்மொழிக் கொள்கையை அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்துங்கள்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல்
சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய மும்மொழிக் கொள்கையை நடப்பு கல்வியாண்டுக்குப் பதிலாக 2027 கல்வியாண்டு முதல் அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது. நடப்பு ஆண்டில் மூன்றாவது மொழியைப் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்கலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் சி.பி.எஸ்.இ. புதிய அறிவிப்பை வெளியிட உள்ளது.
புதுடெல்லி:
சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய மும்மொழிக் கொள்கையை நடப்பு கல்வியாண்டிலேயே அமல்படுத்துவதற்குப் பதிலாக, 2027 கல்வியாண்டு முதல் அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு சி.பி.எஸ்.இ.யிடம் கேட்டுக்கொண்டுள்ளது. தற்போதைய 6-ம் வகுப்பு மாணவர்களில் மூன்றாவது மொழியை இந்த கல்வியாண்டிலேயே படிக்க விரும்புவோருக்கு அதற்கான வாய்ப்பை வழங்கலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மும்மொழிக் கொள்கை என்ன?
சி.பி.எஸ்.இ. கடந்த மே 15-ம் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, 9-ம் வகுப்பு மாணவர்கள் 2026 ஜூலை 1 முதல் மூன்று மொழிகளைப் படிப்பது கட்டாயமாக்கப்பட்டது. இதில் குறைந்தது இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இதேபோல், 6-ம் வகுப்பு மாணவர்களுக்கும் நடப்பு கல்வியாண்டு முதல் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தும் வகையில் விதிமுறைகள் கொண்டுவரப்பட்டன. இந்த நடைமுறை தேசிய கல்விக் கொள்கை 2020-ன் மொழிக் கல்வி அணுகுமுறையுடன் தொடர்புடையதாகும்.
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
சி.பி.எஸ்.இ.யின் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் உள்ளிட்ட தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரிக்க நீதிமன்றம் ஒப்புக்கொண்டு, மத்திய அரசு, சி.பி.எஸ்.இ. மற்றும் என்.சி.இ.ஆர்.டி. ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
6-ம் வகுப்பு மாணவர்களுக்கு விலக்கு குறித்து பரிசீலனை
தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பக்சி மற்றும் வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்தது.
மாணவர்களுக்கு தேவையான கால அவகாசம் கிடைக்கும் வகையில், 6-ம் வகுப்புக்கான கட்டாய மும்மொழிக் கொள்கையை அடுத்த கல்வியாண்டு வரை தள்ளிவைப்பது குறித்து சி.பி.ஏஸ்.இ. பரிசீலிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். அதே நேரத்தில், நடப்பு கல்வியாண்டிலேயே மூன்றாவது மொழியைப் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அந்த வாய்ப்பைத் தொடர்ந்து வழங்கலாம் என்றும் கூறினர்.

0 Comments
No comments yet. Be the first to comment.