ஒரு நாளைக்கு 4 மணி நேரம் மட்டுமே தூங்குகிறேன்" - நடிகை ராஷ்மிகா பேட்டி
தொடர்ந்து திரைப்படங்களில் பிசியாக நடித்து வருவதால், தம்மால் ஒரு நாளைக்கு 4 மணி நேரம் மட்டுமே தூங்க முடிகிறது என நடிகை ராஷ்மிகா மந்தனா தனது சமீபத்திய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் பல திரைப்படங்களில் அவர் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், தனது தற்போதைய பணிச்சுமை குறித்து அவர் அளித்துள்ள பிரத்யேக பேட்டியில், "தொடர்ந்து பல மொழிகளில், வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வருவதால் எனது தனிப்பட்ட நேரத்தை தியாகம் செய்ய வேண்டியுள்ளது.
படப்பிடிப்புத் தளங்களில் ஓய்வில்லாமல் உழைப்பதால், ஒரு நாளைக்கு வெறும் 4 மணி நேரம் மட்டுமே என்னால் தூங்க முடிகிறது. இது என் மருத்துவருக்கே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது" எனத் தெரிவித்துள்ளார். இவ்வளவு கடினமான சூழலிலும் ரசிகர்களுக்காகவும், சினிமா மீதான காதலினாலும் தொடர்ந்து ஓடிக்கொண்டிருப்பதாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தைச் சேர்ந்த ராஷ்மிகா மந்தனா, கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான 'கிரிக் பார்ட்டி' என்ற கன்னடத் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்கில் அவர் நடித்த 'கீதா கோவிந்தம்', 'டியர் காம்ரேட்' மற்றும் 'பீஷ்மா' ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்து, அவரை முன்னணி இடத்திற்கு கொண்டு சென்றன.
தமிழில் கார்த்தி ஜோடியாக 'சுல்தான்' படத்தின் மூலம் அறிமுகமானவர். குறிப்பாக, அல்லு அர்ஜுனுடன் நடித்த 'புஷ்பா' மற்றும் ரன்பீர் கபூருடன் நடித்த இந்தித் திரைப்படமான 'அனிமல்' ஆகியவை இவரை உலகளவில் பிரபலமாக்கியது. தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் பிசியாக இருக்கும் ராஷ்மிகா, தனது அடுத்தடுத்த கட்டமாக சோலோ ஆக்ஷன் த்ரில்லர் படமான 'மைசா', மற்றும் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடிக்கும் வரலாற்றுப் பின்னணி கொண்ட 'ரணபாலி' உள்ளிட்ட பல முக்கியப் படங்களை கைவசம் வைத்துள்ளார்.
பிரபல தெலுங்கு நட்சத்திரங்களான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் கடந்த பிப்ரவரி மாதம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தங்களது குடும்பத்தினர் முன்னிலையில் கோலாகலமாகத் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்திற்குப் பிறகான வாழ்க்கை குறித்து சமீபத்திய நேர்காணலில் ராஷ்மிகா மனம் திறந்துள்ளார்.
அதில், "சினிமா வாழ்க்கையின் உச்சத்தில் இருந்தபோதே நான் திருமணம் செய்து கொண்டாலும், திருமணத்திற்குப் பிறகு எனது வழக்கமான ஓட்டத்திலோ அல்லது சினிமா பயணத்திலோ எந்த ஒரு பெரிய மாற்றமும் ஏற்படவில்லை" என்று கூறியுள்ளார். மேலும், "நானும் விஜய் தேவரகொண்டாவும் நல்ல நண்பர்களாக இருந்து இப்போது தம்பதிகளாக மாறியுள்ளோம். விஜய் வெளியில் பார்க்க கம்பீரமாகத் தெரிந்தாலும், நிஜ வாழ்க்கையில் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியவர் மற்றும் தனது வேலையில் மிகுந்த அர்ப்பணிப்புடன் இருக்கக்கூடிய நபர்" என்று ராஷ்மிகா மந்தனா தனது கணவரைப் பாராட்டிப் பேசியுள்ளார்.

0 Comments
No comments yet. Be the first to comment.