சிவகங்கை சுள்ளான் மதன் கொலை: கரும்புத் தோட்டத்தில் நடந்தது என்ன? - பகீர் பின்னணி!
சிவகங்கையில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் பிரபலமாகி, 40-க்கும் மேற்பட்ட வழக்குகளில் சிக்கிய 25 வயது இளைஞன் சுள்ளான் மதன், ஜாமீனில் வெளிவந்த 18 நாட்களில் ஒக்கூர் அருகே கொடூரமாகக் கொல்லப்பட்டதன் பின்னணி மற்றும் முழு விவரங்கள்.
கை நிறையக் கத்தி, காது கிழியும் சினிமா பிஜிஎம், ஆயிரக்கணக்கில் ஃபாலோவர்ஸ்... 'நாங்கதான்டா லோக்கல் டான்'னு இன்ஸ்டாகிராமில் மிரட்டல் ரீல்ஸ் போட்ட ஒரு போலி உலகின் முடிவு, சிவகங்கையில் பிணமாக முடிந்திருப்பது ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியிருக்கிறது. .
சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்து வெறும் 18 நாட்களே ஆகியிருந்த நிலையில், ஒக்கூர் மஞ்சுவிரட்டு திடலுக்கு அருகே நின்றுகொண்டிருந்த மதனை, 5 இருசக்கர வாகனங்களில் வந்த 11 பேர் கொண்ட கும்பல் நொடிப் பொழுதில் சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டிச் சாய்த்துவிட்டு மறைந்தது. இறக்கும்போது 25 வயதே ஆகியிருந்தாலும், அதற்குள்ளாகவே இவர் மீது 40-க்கும் அதிகமான கடுமையான குற்ற வழக்குகள் பதிவாகியிருந்தன.
உள்ளூர் அரசியல் பிரமுகர் ஒருவரின் மகனாகப் பிறந்து, நல்ல வசதியான குடும்பப் பின்னணியைக் கொண்டிருந்த மதன், கல்லூரிப் பருவத்தில் ஏற்பட்ட தவறான நட்பு மற்றும் குடும்பச் சூழலால் தடம் மாறினார். 17 வயதாக இருக்கும்போது, தனது தாய்மாமன்களுக்கு ஆதரவாக ஒரு சாதாரண சாலைத் தகராறில் இறங்கி எதிர்தரப்பை விரட்டியடித்தார். அப்போது குடும்பத்தினரும் நண்பர்களும் கொடுத்த போலி வீரப் புகழ்ச்சி, அவரை அடுத்தடுத்து பல குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளியது.
பண விவகாரங்களுக்காகக் கடத்தல், ‘தான் தான் பெரிய டான்’ என்ற அதிகாரப் போட்டி, எதிராளிகளைத் தேடிச் சென்று தாக்குவது, கரும்புத் தோட்டத்தில் பதுங்கியிருந்த அண்ணன்–தம்பி இருவரைத் தாக்கியது என மதனின் குற்றப் பட்டியல் நீண்டது. இதன் உச்சக்கட்டமாக, மேலூர் அருகே காதலர் தினத்தன்று ஒரு ஹோட்டல் திறப்பு விழாவில் பட்டப்பகலில் நடத்தப்பட்ட கொலை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ஒருபுறம் வன்முறைச் சம்பவங்கள் என்றால், மறுபுறம் இணையவெளியில் உருவாக்கப்படும் மலிவான போலி பிம்பம். கார்களின் மீது ஏறி அமர்ந்து கத்திகளுடன் போஸ் கொடுப்பது, பிரபல சினிமா பாடல்களைப் பின்னணியாக வைத்து மிரட்டல் ரீல்ஸ் போடுவது என இவரைச் சுற்றி ஒரு தவறான ரசிகர் பட்டாளமே உருவானது. ஒருமுறை காவல் துறையின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, வழக்கறிஞர் வேடமணிந்து 12 பேருடன் நீதிமன்றத்திற்குள் நுழைந்ததைக்கூட இன்ஸ்டாகிராமில் ‘கெத்து’ எனப் பதிவிட்டு கொண்டாடினார்கள்.
காதலித்துத் திருமணம், கண்ணெதிரே தவழும் பச்சிளம் குழந்தை எனத் திருந்தி வாழ எத்தனையோ வாய்ப்புகள் இருந்தும், போலி டான் பிம்பமும் பழிவாங்கும் பகையுணர்வும் அவரை விடவில்லை. இன்று மதன் உயிருடன் இல்லை. ஆனால் அவர் விட்டுச் சென்றது அனாதையாக நிற்கும் ஒரு கைக்குழந்தை, எதிர்காலம் தெரியாமல் கதறி அழும் இளம் மனைவி, அழுது புலம்பும் தாய் தந்தையர்.

0 Comments
No comments yet. Be the first to comment.