தலைப்புஅரசு ஊழியர்களுக்கு மரபு உடை கட்டாயமா? அமைச்சரின் ஆலோசனையை கைவிட சிபிஎம் கடும் வலியுறுத்தல்!
தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் வாரத்தில் ஒரு நாள் மரபு உடை அணிய வேண்டும் என்ற அமைச்சரின் அறிவிப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கும் என சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் விமர்சித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு நாள் சிறப்பு விழாவில் பங்கேற்ற அமைச்சர் ராஜ்மோகன், அரசு ஊழியர்களின் ஆடை கட்டுப்பாடு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். முதலமைச்சர் வாரத்தில் ஒரு நாள் பட்டு வேட்டி, சட்டை அணிந்து வருவதைப் போல, தலைமைச் செயலகம் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களிலும் வாரத்தில் ஒரு நாள் அமைச்சர்களும் அதிகாரிகளும் வேட்டி, சட்டை அணிந்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வரிடம் தான் கோரிக்கை வைத்ததாக அவர் தெரிவித்தார்.
வேட்டி, சட்டை அணிவது தமிழர்களின் மரபைப் போற்றுவதுடன் கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்துக்கும் உதவும் என்பதால் இதற்கான ஏற்பாடுகளைச் செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அதன்படி, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் இனி வாரத்தில் ஒருநாள் அனைத்து அரசு அலுவலகங்களிலும் ‘மரபு ஆடை தினம்’ கடைப்பிடிக்கப்பட உள்ளதாகவும், அரசு ஊழியர்கள் மரபு உடை அணிந்து அலுவலகத்திற்கு வர வேண்டுமென அரசாணை வெளியிட இருப்பதாகவும் அவர் கூறினார். மேலும், தலைமைச் செயலகத்தில் தமிழ்ச் சங்கம் உருவாக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு ஊழியர்கள் வாரத்தில் ஒரு நாள் வேட்டி, சட்டை அணிந்து வர வேண்டும் என்ற ஆலோசனையை தமிழ்நாடு அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது முற்றிலும் பொருத்தமற்ற நடவடிக்கை என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சுட்டிக்காட்ட விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
மாநிலத்திற்குள்ளேயே மரபு உடை என்பது வேறுபட்டதாக இருப்பதை தனது அறிக்கையில் நினைவூட்டிய சண்முகம், தங்களுடைய மரபு உடையை ஒவ்வொருவரும் அணிந்து வருவது என்பது தேவையற்ற விவாதங்களை எழுப்பும் என்றும், கேள்விக்குள்ளாக்கப்படும் என்றும் எச்சரித்தார். இத்தகைய ஆடை குறித்த வழிகாட்டுதல்கள் நிகழ்கால சமூகச் சூழலில் தவறான முறையில் விரிவாக்கப்படுவதற்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு அமைச்சரின் அந்த ஆலோசனையை உடனடியாக கைவிட வேண்டுமென சிபிஎம் வலியுறுத்தியுள்ளது.

0 Comments
No comments yet. Be the first to comment.