விஜே சித்து இயக்கி நடிக்கும் ‘டயங்கரம் ’ படத்தின் டீசர் வெளியானது!
விஜே சித்து எழுதி, இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ள ‘டயங்கரம்’ திரைப்படத்தின் டீசர் இன்று மாலை 3 மணிக்கு வெளியிடப்படும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் நட்டி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தமிழ் யூடியூப் உலகில் அதிக ரசிகர்களைக் கொண்டவர்களில் ஒருவராக விஜே சித்து திகழ்கிறார். நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும், பிராங்க் ஷோ நிகழ்ச்சிகள் மூலமாகவும் தனது பயணத்தைத் தொடங்கிய இவர், பின்னர் ‘சித்து விளாக்ஸ்’ என்ற யூடியூப் சேனல் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். தொடர்ந்து திரைப்படங்களிலும் நடிக்கத் தொடங்கிய விஜே சித்து, பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான ‘டிராகன்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தற்போது தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார் விஜே சித்து. வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘டயங்கரம்’. இப்படத்தின் கதையை எழுதி, இயக்கி, கதாநாயகனாகவும் விஜே சித்து நடித்துள்ளார்.
இப்படத்தில் நட்டி, காளி வெங்கட், இளவரசு, நிதின் சத்யா, ஹர்ஷத் கான், கதிர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார். படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
படத்தின் படப்பிடிப்பு நிறைவு
விஜே சித்துவின் ‘டயங்கரம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாகப் படக்குழு சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன.
படத்தின் டீசர் வெளியானது
இந்நிலையில், ‘டயங்கரம்’ திரைப்படத்தின் டீசரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. டீசர் வெளியானதைத் தொடர்ந்து விஜே சித்துவின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இயக்குநராகவும் கதாநாயகனாகவும் அவர் உருவாக்கியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொங்கல் வெளியீடு அறிவிப்பு
மேலும், ‘டயங்கரம்’ திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. விஜே சித்துவின் புதிய முயற்சியாக உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களிடையே எந்த அளவிற்கு வரவேற்பைப் பெறும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

0 Comments
No comments yet. Be the first to comment.