20 ஆண்டு கால சட்டப் போராட்டம்: சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடி விடுதலை!
முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான 20 ஆண்டு கால சொத்துக்குவிப்பு வழக்கில், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் அவரும் அவரது குடும்பத்தினர் 6 பேரும் தூத்துக்குடி நீதிமன்றத்தால் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.
தமிழக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அவரது மனைவி ஜெயந்தி, இரு சகோதரர்கள் மற்றும் மூன்று மகன்கள் என மொத்தம் ஏழு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தகுந்த ஆதாரங்களுடன் லஞ்ச ஒழிப்புத்துறையால் நிரூபிக்கப்படாததால், 7 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதன் மூலம் கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. கடந்த 2006-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறையால் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த வழக்கில், அமலாக்கத்துறையும் தங்களை இணைத்துக் கொள்ள நீண்ட காலமாக முயற்சி செய்து வந்தது. இதற்காக பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட போதிலும், இது முழுக்க முழுக்க லஞ்ச ஒழிப்புத்துறையின் வரம்பிற்குள் வரும் வழக்கு எனக்கூறி அமலாக்கத்துறையின் கோரிக்கையை நீதிமன்றம் திட்டவட்டமாக நிராகரித்தது.
இந்த வழக்கு தொடரப்பட்ட ஆரம்ப காலகட்டத்தில், முன்னாள் அமைச்சரின் வருமானத்திற்கும் சொத்துக்களுக்கும் முறையான கணக்குகள் இருப்பதாகவும், அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்க்கவில்லை எனவும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், பின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் போது வந்த அதிமுக அரசு, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த வழக்கின் போக்கை மாற்றிப் புதிய குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது. அடுத்தடுத்து மூன்று முறை குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு பல திருப்பங்களைச் சந்தித்தது.
சைக்கிளில் பாத்திரங்களை ஏற்றி வியாபாரம் செய்து, தமது கடின உழைப்பால் முன்னேறி மதுரை பாத்திரத் தொழிலில் பெரும் தொழிலதிபராக உயர்ந்தவர் அனிதா ராதாகிருஷ்ணன். முறையாக வருமான வரி செலுத்தி நேர்மையாக தொழில் செய்து வந்த அவர் மீது, அரசியல் பழிவாங்கும் நோக்கத்திற்காகவே இந்த வழக்கு புனையப்பட்டதாகக் கூறப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளாக மிகுந்த மன உளைச்சலைச் சந்தித்து வந்த முன்னாள் அமைச்சரும் அவரது குடும்பத்தினரும், இன்றைய தீர்ப்பின் மூலம் தங்களது நியாயத்தை நிரூபித்து குற்றச்சாட்டுகளில் இருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.

0 Comments
No comments yet. Be the first to comment.