தனுஷ் நடிக்கும் ‘ஓம்’ படம் புஷ்பா போன்றதா? – விமர்சனங்களுக்கு இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி விளக்கம்!
தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘ஓம்’ படத்தின் டீசர் வெளியான நிலையில், இது ‘புஷ்பா’ படத்தின் சாயலில் உள்ளதாக எழுந்த விமர்சனங்களுக்கு இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி விளக்கமளித்துள்ளார்.
தனுஷ் நடிப்பில், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஓம்’ (Om - Chapter 1). இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தில் தனுஷுடன் இணைந்து சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா கதாநாயகிகளாகவும், நடிகர் மம்மூட்டி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர்.
படம் அக்டோபர் 16ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் நிலையில், டீசரைப் பார்த்த சிலர் இது அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ படம் போல செம்மரக் கடத்தலை மையமாகக் கொண்ட கதையாக இருக்குமோ என சமூக வலைதளங்களில் விவாதிக்கத் தொடங்கினர்.
இயக்குனரின் பதில்:
இது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி கூறியதாவது:
"நீங்கள் டீசரில் பார்த்தது ஒரு காட்சி மட்டுமே. அதை பார்க்கும்போது ஒவ்வொருவருக்கும் ஒரு விஷயம் தோன்றும். அந்த விவாதத்தை தொடங்கத் தான் இதுபோன்ற வீடியோக்களை நாங்கள் வெளியிடுகிறோம். அதைத் தாண்டி படத்தில் பல விஷயங்கள் உள்ளன. அது ஒவ்வொன்றாக வெளியாகும் போது உங்களுக்கே புரியும்."
மேலும், ‘ஓம்’ என்ற தலைப்பு சென்சேஷனுக்காக வைக்கப்பட்டது அல்ல என்றும், கதை எழுதும்போதே இந்த டைட்டில் உறுதியாகிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தமிழர்களை பெருமைப்படுத்தும் படமா?
"செம்மரக் கடத்தல் செய்யும் தமிழர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் இந்த கதை இருக்குமா?" என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "இது யாரையும் பெருமைப்படுத்தும் படம் அல்ல," என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

0 Comments
No comments yet. Be the first to comment.