தியேட்டரில் தோல்வி, யூடியூபில் 100 கோடி Views! இந்திய சினிமாவின் புதிய சாதனை படைத்த Jaya Janaki Nayaka!
திரையரங்குகளில் தோல்வியடைந்த 'ஜெய ஜானகி நாயகா' திரைப்படம், யூடியூபில் 100 கோடி பார்வைகளைக் கடந்து டிஜிட்டல் தளத்தில் இந்த சாதனையைப் படைத்த முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
திரைப்படங்களின் வெற்றி மற்றும் தோல்வி பெரும்பாலும் அதன் பாக்ஸ் ஆபிஸ் வசூலை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடப்படுகிறது. ஆனால், டிஜிட்டல் யுகத்தில் அந்த இலக்கணம் மாறிவருகிறது என்பதை நிரூபிக்கும் வகையில், 2017-ஆம் ஆண்டு வெளியாகி திரையரங்குகளில் தோல்வியடைந்த 'ஜெய ஜானகி நாயகா' (Jaya Janaki Nayaka) திரைப்படம் தற்போது இந்திய சினிமா வரலாற்றில் புதிய சாதனையை படைத்துள்ளது.
இயக்குநர் போயபாடி சீனு இயக்கத்தில், பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நடித்த இந்த ஆக்ஷன் திரைப்படம் சுமார் ரூ.40 கோடி செலவில் தயாரிக்கப்பட்டது. ஆனால், வெளியான போது ரசிகர்களிடையே எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாத இப்படம் வெறும் ரூ.20 கோடி வசூலை மட்டுமே ஈட்டியது. இதனால், இப்படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்விப் படமாக கருதப்பட்டது.
எனினும், திரையரங்குகளில் கிடைக்காத வெற்றியை டிஜிட்டல் உலகம் இந்தப் படத்திற்கு வழங்கியது. 'கூன்ஹார்' (Khoonkhar) என்ற பெயரில் ஹிந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்ட இந்தப் படம், 2019-ஆம் ஆண்டு 'பென் மூவிஸ்' (Pen Movies) நிறுவனத்தின் யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்டது. அப்போது பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல் வெளியிடப்பட்ட இந்தத் திரைப்படம், படிப்படியாக ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியது.
ஒரே நாளில் வைரலாகாமல், கடந்த ஆறு ஆண்டுகளாக தொடர்ந்து புதிய பார்வையாளர்களை ஈர்த்து வந்த இந்தத் திரைப்படம் தற்போது 100 கோடி பார்வைகள் அல்லது 1 பில்லியன் views என்ற வரலாற்றுச் சாதனையை எட்டியுள்ளது. டிஜிட்டல் தளத்தில் மட்டுமே ஒரு இந்திய முழுநீள திரைப்படம் இந்த அளவிலான பார்வையாளர்களை சென்றடைந்திருப்பது இதுவே முதல்முறையாகும்.
இந்த சாதனைக்கு பின்னால் பல காரணங்கள் உள்ளதாக சினிமா விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். வட இந்திய ரசிகர்களை கவரும் வகையில் பிரமாண்டமான சண்டைக் காட்சிகள், குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்ட கதை, உணர்ச்சிகரமான திரைக்கதை ஆகியவை படத்தின் நீண்டகால வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளன. மேலும், பார்வையாளர்களின் தொடர்ச்சியான ஈடுபாட்டை உணர்ந்த யூடியூப் அல்காரிதம், இந்தப் படத்தை புதிய பயனர்களுக்கு தொடர்ந்து பரிந்துரைத்ததும் அதன் பார்வையாளர்கள் எண்ணிக்கையை உயர்த்த முக்கிய பங்கு வகித்துள்ளது.
இந்தச் சாதனையை படக்குழுவினர் சமூக வலைத்தளங்களில் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இயக்குநர் போயபாடி சீனு தனது சமூக வலைத்தள பதிவில், "1 பில்லியன் பார்வைகள், 1000 மில்லியன் இதயங்கள், 100 கோடி உணர்வுகள், ஒரு திரைப்படம். உலகிலேயே இந்தச் சாதனையை எட்டிய முதல் படம் இதுதான்" என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
நடிகை ரகுல் ப்ரீத் சிங், "ஜானகி கதாபாத்திரம் எப்போதும் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானது. இந்தப் படத்திற்கு ரசிகர்கள் அளித்திருக்கும் அன்பு எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார். அதேபோல், படத்தின் நாயகன் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸின் ரசிகர்களும் இந்த சாதனையை சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
ஒரு காலத்தில் தோல்விப் படமாக கருதப்பட்ட 'ஜெய ஜானகி நாயகா', இன்று டிஜிட்டல் உலகில் இந்திய சினிமாவின் மிகப்பெரிய வெற்றிக் கதைகளில் ஒன்றாக மாறியுள்ளது. திரையரங்குகளில் கிடைக்காத அங்கீகாரத்தை இணைய உலகம் வழங்கியிருப்பது, சினிமாவின் வெற்றியை இனி வசூல் மட்டுமே தீர்மானிக்காது என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக இந்தப் படம் திகழ்கிறது.

0 Comments
No comments yet. Be the first to comment.