ரசிகர் மன்ற கொடியை அறிமுகப்படுத்திய தனுஷ்... அரசியல் என்ட்ரிக்கு அச்சாரமா? பரபரக்கும் புதிய விவாதம்!
நடிகர் தனுஷ் தனது ரசிகர் நற்பணி மன்றத்தின் புதிய கொடியை அறிமுகப்படுத்தியுள்ளார். கொடியின் வடிவமைப்பு அரசியல் சாயலை நினைவூட்டுவதாக சமூக வலைதளங்களில் விவாதம் கிளப்பியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், தனது ரசிகர் நற்பணி மன்றத்தின் புதிய கொடியை அறிமுகப்படுத்தியிருப்பது சமூக வலைதளங்களிலும், அரசியல் வட்டாரங்களிலும் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனுஷ் வெளியிட்டுள்ள கொடியில் மேல் பகுதி வெள்ளை நிறத்திலும், கீழ் பகுதி சிவப்பு நிறத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் நடுவில் சிவப்பு நிற நட்சத்திரம் இடம்பெற்றுள்ளது. வழக்கமாக ரசிகர் மன்ற கொடிகளில் நடிகரின் உருவப்படம் மட்டுமே இடம்பெறும் நிலையில், இந்த புதிய வடிவமைப்பில் நட்சத்திர சின்னம் இணைக்கப்பட்டிருப்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையடுத்து, "தனுஷ் அரசியலுக்கு வருவதற்கான முன்னோட்டமா இது?" என்ற கேள்வி சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ரசிகர் மன்றத்தை வலுப்படுத்தும் முயற்சியா அல்லது எதிர்கால அரசியல் திட்டத்திற்கான சிக்னலா என்ற விவாதமும் எழுந்துள்ளது.
இதற்கு முன்பு நடிகர் சூர்யா நடித்த கருப்பு திரைப்படத்தில் அவர் சட்டமன்றத்தில் அமர்ந்திருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, சூர்யா அரசியலுக்கு வரப்போகிறார் என்ற தகவல்கள் வெளியாகின. மேலும், அவரது ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவரின் கருத்தும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், பின்னர் ரசிகர் மன்றம் அதற்கு மறுப்பு தெரிவித்து, அரசியல் என்ட்ரி குறித்த தகவல்களை மறுத்தது.
அந்த விவாதம் அடங்குவதற்குள் தற்போது தனுஷ் ரசிகர் மன்ற கொடியை அறிமுகப்படுத்தியிருப்பது, மீண்டும் நடிகர்களின் அரசியல் வருகை குறித்த பேச்சுகளை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரவும், அரசியல் கட்சி தொடங்கவும் உரிமை உள்ளது. இருப்பினும், அரசியல் குறித்து ரசிகர்கள் மத்தியில் பல்வேறு எதிர்பார்ப்புகள் உருவாகியுள்ளன. சிலர், தனுஷ் உண்மையிலேயே அரசியல் பயணத்தை தொடங்கினால் அதனை முழுமையாக முன்னெடுக்க வேண்டும் என்றும், வெறும் அறிவிப்புகளோடு முடிவடையக் கூடாது என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தற்போதைக்கு தனுஷ் தரப்பில் அரசியல் குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. எனவே, இந்த புதிய கொடி ரசிகர் மன்ற அடையாளமாக மட்டுமே தொடருமா அல்லது எதிர்கால அரசியல் பயணத்திற்கான முன்னோட்டமாக அமையுமா என்பது குறித்து காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

0 Comments
No comments yet. Be the first to comment.