இளையராஜா பாடலை பயன்படுத்த ஜி.வி.பிரகாஷுக்கு தடை... சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
"ஹேப்பி ராஜ்" திரைப்படத்தில் இளையராஜாவின் "பொதுவாக என் மனசு தங்கம்" பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், அந்த பாடலை பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் ஜி.வி.பிரகாஷுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இசையமைப்பாளர் இளையராஜாவின் புகழ்பெற்ற "பொதுவாக என் மனசு தங்கம்" பாடலை, தனது அனுமதியின்றி மாற்றி பயன்படுத்தியதாக எழுந்த சர்ச்சையில், நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
ஜி.வி. பிரகாஷ் நடித்த "ஹேப்பி ராஜ்" திரைப்படம் கடந்த மார்ச் 27-ஆம் தேதி வெளியானது. இந்தப் படத்தில், 1980-ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த "முரட்டுக் காளை" திரைப்படத்தில் இடம்பெற்ற இளையராஜா இசையமைத்த "பொதுவாக என் மனசு தங்கம்" பாடல் மாற்றியமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தப் பாடலை தனது அனுமதியின்றி உருமாற்றி பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி, இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமரேஷ் பாபு, சம்பந்தப்பட்ட பாடலை தொடர்ந்து பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதித்தார்.
மேலும், இளையராஜாவின் அனுமதி பெறாமல் பாடலை பயன்படுத்தியதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக "ஹேப்பி ராஜ்" படத்தின் தயாரிப்பாளர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திரைப்படம் வெளியாகி மூன்று மாதங்கள் கடந்த நிலையில் இந்த இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இளையராஜா தனது பாடல்களை மற்ற படங்களில் பயன்படுத்துவதற்கு முற்றிலும் எதிரானவர் அல்ல. ஆனால், அவரது இசை மற்றும் மெட்டுகளை பயன்படுத்தும் முன் உரிய அனுமதி பெறுவது அவசியம் என்ற நிலைப்பாட்டை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அனுமதியின்றி பாடல்கள் பயன்படுத்தப்பட்டால், சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்கவும் அவர் தயங்குவதில்லை.
இதற்கு முன்பும் பல திரைப்படங்கள் இதேபோன்ற சட்டச் சிக்கல்களை சந்தித்துள்ளன. "டியூட்" திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட "கருத்த மச்சான்", "100 வருஷம் இந்த மாப்பிள்ளையும்" உள்ளிட்ட ரீமிக்ஸ் பாடல்கள் தொடர்பாக இளையராஜா தொடர்ந்த வழக்கின் பின்னர் அவை நீக்கப்பட்டன. அதேபோல், நடிகர் அஜித் நடித்த "குட் பேட் அக்லி" திரைப்படத்தில் இடம்பெற்ற "இளமை இதோ இதோ", "ஒத்த ரூபாயும் தாரேன்", "என் ஜோடி மஞ்சக் குருவி" உள்ளிட்ட பாடல்களின் பயன்பாட்டுக்கும் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது.
திரைப்பட தயாரிப்பாளர்கள், பாடல்களின் ஒலிப்பதிவு (Sound Recording) உரிமையை இசை நிறுவனங்களிடமிருந்து பெற்றிருந்தாலும், பாடலின் அசல் மெட்டு மற்றும் இசை உருவாக்கத்தின் காப்புரிமை இசையமைப்பாளரிடமே இருக்கும் என்பது இந்த வழக்குகளின் முக்கிய சட்ட அம்சமாக பார்க்கப்படுகிறது. எனவே, இளையராஜாவின் இசையமைப்புகளை பயன்படுத்த விரும்புபவர்கள், இசை நிறுவனங்களின் அனுமதியுடன் சேர்த்து, இசையமைப்பாளரின் அனுமதியையும் தனியாக பெற வேண்டும் என்பது மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

0 Comments
No comments yet. Be the first to comment.