விஸ்வநாதன் சர்ச்சை, கீர்த்தனா கருத்து... மாணவர்களே இலக்கா? மௌனம் காக்கும் சிஎம் விஜயை எதிர்க்கட்சிகள் கேள்வி?
அமைச்சர் விஸ்வநாதன் தொடர்பான சர்ச்சை ஓயாத நிலையில், அமைச்சர் கீர்த்தனாவின் "லாஸ்ட் பெஞ்ச் மாணவிகள்" குறித்த கருத்தும் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரண்டு விவகாரங்களிலும் முதல்வர் விஜய் இதுவரை நேரடியாக கருத்து தெரிவிக்காததை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
தமிழக அரசின் அமைச்சர்கள் தொடர்பான தொடர் சர்ச்சைகள் அரசியல் அரங்கில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அமைச்சர் விஸ்வநாதன் தொடர்பான விவகாரம் இன்னும் முழுமையாக அடங்காத நிலையில், அமைச்சர் கீர்த்தனாவின் பள்ளி ஆய்வின்போது பேசிய கருத்து புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த இரண்டு சம்பவங்களும் மாணவர்கள் மற்றும் கல்விச் சூழலை மையமாகக் கொண்டவை என்பதால், முதல்வர் விஜய் ஏன் இதுவரை நேரடியாக கருத்து தெரிவிக்கவில்லை என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன.
தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து, அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆய்வு என்ற பெயரில் வெளியிடும் சமூக வலைத்தள 'ரீல்ஸ்' வீடியோக்கள் அடிக்கடி விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றன. மருத்துவமனைகள், பள்ளிகள், அரசு அலுவலகங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொள்ளும் நிகழ்வுகள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டாலும், அவை நிர்வாகத்தை விட விளம்பர நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகளும் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றன
சில சந்தர்ப்பங்களில் ஆய்வு என்ற பெயரில் வீடியோக்கள் வெளியிட்ட கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும், அமைச்சர்களே சர்ச்சையில் சிக்குவது அரசுக்கு கூடுதல் சிக்கலை ஏற்படுத்தி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அவற்றில் முதன்மையானது அமைச்சர் விஸ்வநாதன் தொடர்பான விவகாரம். கடந்த ஜூன் 21-ஆம் தேதி மதுரை மாவட்டம் மேலூரில் நடைபெற்ற யோகா தின மாரத்தான் நிகழ்ச்சியில், மயங்கி விழுந்ததாகக் கூறப்பட்ட சில மாணவிகளுக்கு அமைச்சர் முதலுதவி அளித்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்த வீடியோக்களில் அமைச்சர் மாணவிகளின் உடலைத் தொட்ட விதம் குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
இதையடுத்து சில அரசியல் கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். திமுக சார்பிலான வழக்கறிஞர்களும் புகார் அளித்தனர். இதற்கு பதிலளித்த அமைச்சர் விஸ்வநாதன், மனிதாபிமான அடிப்படையில் முதலுதவி மட்டுமே செய்ததாகவும், தனது செயல் தவறாக சித்தரிக்கப்படுவதாகவும் விளக்கம் அளித்தார்.
இந்த சர்ச்சை அடங்குவதற்குள் மற்றொரு விவகாரம் கவனத்தை ஈர்த்தது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கீர்த்தனா, வகுப்பறையில் மாணவிகளுடன் கலந்துரையாடியபோது ஆங்கிலத்தில் சில கேள்விகளை எழுப்பினார். அதற்கு முதல் பெஞ்சில் அமர்ந்திருந்த மாணவிகள் பதிலளிக்க முடியாத நிலையில், "முதல் பெஞ்ச் மாணவிகளே இப்படி இருந்தால், கடைசி பெஞ்ச் மாணவிகளை நினைத்துப் பாருங்கள்" என்று பேசியதாக வெளியாகிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.
இந்த கருத்து அரசு பள்ளி மாணவர்களை இழிவுபடுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் அமைச்சரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தனர்.
சர்ச்சை தீவிரமடைந்த நிலையில் அமைச்சர் கீர்த்தனா விளக்கம் அளித்தார். "அரசுப் பள்ளி மாணவியை நான் கேலி செய்ததாக பரப்பப்படுவது உண்மையல்ல. நானும் அரசு பள்ளியில் தமிழ் வழியில் படித்தவள்தான். மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில்தான் அந்த கருத்தை தெரிவித்தேன்" என்று கூறினார்.
இருப்பினும், இந்த விளக்கம் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை முழுமையாக அடக்கவில்லை. குறிப்பாக, கல்வி நிலையங்களில் நடைபெறும் ஆய்வுகள் மாணவர்களுக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்தக் கூடாது என்றும், பொதுவெளியில் பேசப்படும் வார்த்தைகள் மாணவர்களின் தன்னம்பிக்கையை பாதிக்கக் கூடும் என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த இரண்டு சம்பவங்களிலும் முதல்வர் விஜய் நேரடியாக கருத்து தெரிவிக்காதது தற்போது அரசியல் விவாதமாக மாறியுள்ளது. அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கே இருப்பதாக எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன. மாணவர்களின் பாதுகாப்பு, மனநலம் மற்றும் கல்விச் சூழல் தொடர்பான விவகாரங்களில் அரசு தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேநேரத்தில், ஆளுங்கட்சி தரப்பினர், தனித்தனியாக எழுந்த விவகாரங்களுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்களே விளக்கம் அளித்துள்ளதாகவும், தேவையற்ற அரசியல் சர்ச்சைகளை உருவாக்கும் நோக்கில் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரங்களை பெரிதுபடுத்துவதாகவும் கூறி வருகின்றனர்.
மாணவர்கள் பாதுகாப்பாகவும், மனஅழுத்தமின்றியும் கல்வி கற்க வேண்டிய சூழலை உறுதி செய்வது எந்த அரசின் முக்கிய பொறுப்பாகவும் பார்க்கப்படுகிறது. இதனால், அமைச்சர்கள் தொடர்பான இத்தகைய சர்ச்சைகள் தொடர்ந்து எழுந்துவரும் நிலையில், அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்பதையே அரசியல் வட்டாரங்களும் கல்வியாளர்களும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

0 Comments
No comments yet. Be the first to comment.